இவளை எந்த இனத்தில் சேர்ப்பது?...
திருச்சி: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த குழந்தையை கொன்று பெயின்ட் டின்னில் அடைத்த அம்மாவுக்கு திருச்சி கோர்ட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. திருச்சி அரியமங்கலம் வடக்கு உக்கடை இக்பால் தெருவை சேர்ந்தவர் சவுகத் அலி (24). இவரது மனைவி பாத்திமா மரியம் (21). இவர்களது மகள் நூருல் ஷிபா (2). கடந்த மார்ச் 5ம் தேதி பாத்திமா மரியம், மகள் நூருல் ஷிபாவுடன் திடீரென மாயமானார். உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் சவுகத் அலி தேடினார். மறுநாள் சவுகத் அலியின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. அப்போது வீட்டு பரணில் இருந்த பெயின்ட் காலி டின்னில் நூருல் ஷிபா உடல் அழுகிய நிலையில் இருந்தது தெரியவந்தது. இதுபற்றி அரியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பாத்திமா மரியத்திற்கும், அவருடன் படித்த ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததும், அவருடன் பாத்திமா மரியம் சென்றிருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. அதன்பின் கும்பகோணத்தில் கள்ளக்காதலனுடன் இருந்த பாத்திமா மரியத்தை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்காதலனுடன் வீட்டை விட்டு செல்ல முயன்றபோது, குழந்தை அழுது கொண்டே இருந்ததால், அதன் கழுத்தை நெரித்து கொன்று, பரண்மேல் இருந்த பெயின்ட் டின்னில் அடைத்து விட்டு சென்றதாக பாத்திமா வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து திருச்சி மகளிர் சிறையில் அவர் அடைக்கப்பட்டார். இது தொடர்பான வழக்கு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன், குழந்தையை கொன்ற குற்றத்திற்காக பாத்திமா மரியத்துக்கு ஆயுள் தண்டனை, கொலையை மறைக்க முயற்சித்த குற்றத்திற்காக 7 வருட சிறை தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தார். இதை ஏக காலத்தில் பாத்திமா மரியம் அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.
முதல் பதிவு