வீட்டு வாடகை, காய்கறி மற்றும் அனைத்து அத்தியாவசிய பொருட்கள் விலை ஏற்றத்திற்கு IT துறையில் வேலை செய்பவர்கள்தான் காரணமா?..| Price raise, Price hike, rent increase caused by IT employees?..
விலை ஏற்றத்திற்கு யார் காரணம்?..
வீட்டு வாடகை, காய்கறி மற்றும் அனைத்து அத்தியாவசிய பொருட்கள் விலை ஏற்றத்திற்கு IT துறையில் வேலை செய்பவர்கள்தான் காரணமா?..நேற்று வேலை முடித்து, வீடு திரும்புகையில் பேருந்தில் இருவர் பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் பேச்சின் சாராம்சம், IT துறையினர் வந்த பிறகு சென்னையில் எல்லா விலைகளும் ஏறிவிட்டதேன்றும், வீட்டு வாடகை கிடி கிடு வென உயர்ந்ததர்க்கும் IT துறையினர் காரணம் என்பதை போலவும் பேசிவந்தார்கள்.
சமீப காலமாக, ஊடகங்களும் இதே வேலையை செய்கிறது . இதழியல் ஊடகமோ, காட்சி ஊடகமோ எல்லா ஊடகங்களும் பாரபட்சமில்லாமல் IT இளைஞர்களை திட்டுதீர்க்கிறது . என்ன தவறு செய்தோம் என்பது தான் எனக்கு புரியவே இல்லை . இத்தனைக்கும், இந்த தேசத்தில் ஜனவரி, பிப்ரவரி தவிர எல்லா வரிகளையும் நாங்கள் கட்டுகிறோம் . ஆனால் இந்த சமுதாய குற்றங்கள் எல்லாவற்றிற்கும், எங்களையே பொறுப்பாக்குவது எப்படி நியாயம்? ஏதோ நாங்கள் வந்த பிறகு தான் நாடு நாசமாய் போனது என நினைக்கிறார்கள் .
IT துறையில் இருக்கிறவர்கள் ஏதோ வரம் வாங்கி வந்தவர்கள் என்றே எல்லோரும் நினைக்கிறார்கள். நான், சொல்கிறேன் நாங்கள் சபிக்கப்பட்டவர்கள் . இன்றைக்கு மனநல மருத்துவர்களிடம் போகிற பத்தில் ஒன்பது பேர் IT துறையினர் தான். எங்களுக்கான சங்கடங்கள் நாங்கள் மட்டுமே அறிந்தது . நாங்கள் தூக்கி சுமக்கிற பொதிகளை , இந்த சமூகம் கவனிக்க மறந்துவிடுகிறது .
ஒரு வீடு பார்த்து நாங்கள் இங்கே தங்குவதற்குள் எங்கள் தாவு தீர்ந்து விடுகிறது . ஏதோ வீட்டு ஓனர் குறைவாக வாடகை கேட்டு, நாங்கள் சம்பாதிக்கிற திமிரால் கூடுதலாக கொடுக்கிறோம் என்றல்லவா ஒரு மாயையை உருவாக்குகிறார்கள் . ஆறுமாதத்திற்கு ஒரு முறை வாடகையை உயர்த்த சொல்லி, நாங்களா வீட்டின் உரிமையாளரிடம் சொன்னோம்? எங்களை குறை சொல்கிற அளவிற்கு கூட, எங்களிடம் அடாவடித்தனமாய் அடித்து பணம் பிடுங்குகிற ஒனர்களை குறை சொல்வதில்லை. இந்த பகுதிக்கு இவ்வளவு தான் வாடகை என்பதை வரையறுக்க வேண்டியவர்கள், IT துறையினரா? இல்லை அரசாங்கமா.? காய்கறி விலை உயர்விற்கும், IT துறையினருக்கும் என்ன சமபந்தம் இருக்கிறது . ? தங்கம் விலை உயர்வும் எங்களால் தான் என்றால், எங்களுக்கு சிரிப்பு தான் வருகிறது .
அது மட்டுமல்ல, கழுத்தில் தொங்கும் அடையாள அட்டைய பார்த்தாலே போதும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு குதுகலம் வந்துவிடுகிறது.
இருபது ரூபாய் பயணத்திற்கு நூறு ரூபாய் கேட்பார்கள். இதை கேட்டால், நீங்கள் தான் சம்பாதிகின்றிகள், கொடுப்பதால் என்ன தவறு என்று வாய் கூசாமல் கேட்கிறார்கள்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் . நாங்கள் ஒரு வீடெடுத்து தங்காமல் , நடுத்தெருவில் உறங்கினால் உங்கள் உள்ளம் குளிருமோ ..? ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் உட்கார்ந்தே வேலை செய்கிறோம் என்று உங்களுக்கு தெரியுமா.? முதுகு வலியில் இருந்து மூட்டு வலி வரை இப்போதே வந்துவிட்டது எங்களுக்கு. எங்களால் தான் இன்றைக்கு நிறைய மருத்துவமனைகளின் பிழைப்பு நடக்கிறது . ஏதோ IT துறையினர் சுலபமாக சம்பாதிப்பதாகவே நினைக்கிறார்கள் .
நான் ஒத்துக்கொள்கிறேன், சாக்கடை சுத்தம் செய்கிறவரை விடவும் நாங்கள் ஒன்றும் கடினமான வேலை செய்யவில்லை. ஆனால் அவர் பெறுகிற ஊதியத்தை விடவும் நாங்கள் கூடுதலாக பெறுகிறோம் . ஒத்துக்கொள்கிறேன். இது இந்த சமூகத்தின் வாழ்வியல் மற்றும் பொருளாதார கோளாறு . இதை சரிசெய்ய வேண்டிய தீவெட்டி தடியன்கள் ஒட்டு பொறுக்க வருவார்கள் . அவர்களிடம் பல்லை இளித்து, போடுகிற பிச்சையை பொருக்கி எடுத்துக்கொண்டு ஓட்டை விற்கிற உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது எங்களை குறை சொல்ல. எத்தனை சுழி என்றே தெரியாத அளவுக்கு ஊழல் செய்தவனை எல்லாம் கூட நீங்கள் இப்படி சபிக்கமாட்டீர்கள் . அதனால் தான் நான், கட்டுரையின் ஆரம்பத்திலேயே சொன்னேன், IT துறையினர் சபிக்கப்பட்டவர்கள்.
Author -