Friday, 28 March 2014

தூங்கிய பெண்ணிடம் தங்கச் சங்கிலியைப் பறித்து அதனை விழுங்கிய வாலிபர்...

சென்னை புனித தோமையார்மலை நசரத்புரத்தை சேர்ந்த தனலட்சுமி, தனது உடல்நலம் பாதிக்கப் பட்ட தந்தையை பராமரிப்பதற்காக சென்னை அரசு பொது மருத்துவமனையில் தங்கி இருந்தார். 
 
வார்டுக்கு வெளியே உறங்கிக் கொண்டிருந்த தனலட்சுமியின் கழுத்தில் இருந்த 3 சவரன் தங்கச் சங்கிலியை மர்ம நபர் ஒருவர் அறுத்துக்கொண்டு ஓடினார். இதனால் அதிர்ச்சியடைந்த தனலட்சுமி ‘‘திருடன் திருடன்'', என்று கூச்சலிட்டார். தனலட்சுமியின் அலறல் சத்தம் கேட்டு மர்ம ஆசாமியை பொதுமக்கள் விரட்டிப் பிடித்துள்ளனர். ஆனால், அதற்குள் தான் துரத்தப் படுவதை உணர்ந்த திருடன் சினிமா பட ஸ்டைலில் திருடிய செயினை வாயில் போட்டு விழுங்கியுள்ளார். செயின் பறிப்பு தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அரசு மருத்துவமனை போலீசார் திருடனைக் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், திருட்டில் ஈடுபட்ட நபர் சென்னை திருவல்லிக்கேணி பல்லவன்சாலை பகுதியை சேர்ந்த கமலக்கண்ணன்(28) என்பது தெரியவந்தது. திருடிச் சென்ற செயின் குறித்து முன்னுக்குப் பின் முரணான தகவல் அளித்த கமலக்கண்ணனை மருத்துவர்கள் சோதனை செய்தனர். அப்போது எக்ஸ்ரேயில் கமலக்கண்ணனின் வயிற்றில் தங்கச் சங்கிலி இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து கமலக்கண்ணன் வயிற்றில் உள்ள தங்க சங்கிலியை வெளியே கொண்டு வருவதற்கான சிகிச்சை அளிக்கவும், முடியாதபட்சத்தில் அறுவை சிகிச்சை செய்து வெளியே எடுக்கவும் முடிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து நேற்று பிற்பகலில் கமலக்கண்ணனுக்கு ‘எண்டோஸ்கோபி' சிகிச்சை அளிக்கப்பட்டு, அதன் மூலம் வயிற்றில் இருந்த 20 செ.மீ. நீளமுள்ள தங்கசங்கிலி வெளியே எடுக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘‘தற்போது குற்றவாளி மயக்கநிலையில் உள்ளான். மயக்கம் தெளிந்தவுடன், மருத்துவமனை காவல்நிலையத்துக்கு கொண்டுபோய் மேற்கொண்டு விசாரணை நடத்தப்பட இருக்கிறது. கமலக்கண்ணன் மீது ஏற்கனவே பல கொள்ளை, திருட்டு சம்பவங்கள் இருக்கின்றன. மேலும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதாகி இருந்த கமலக்கண்ணன் சமீபத்தில் தான் விடுதலையாகி இருந்தான். வெளியே வந்தவுடன் மீண்டும் கைவரிசை காட்ட முயன்றபோது, கையும், களவுமாக மாட்டிக்கொண்டான்'' எனத் தெரிவித்தனர்.
Related Posts Plugin for WordPress, Blogger...